எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்


எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
x

ஜோலார்பேட்டை அருகே நடந்த எருதுவிடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே நடந்த எருதுவிடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

எருது விடும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன்நகர் கிராமத்தில் 2-ம் ஆண்டு எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மத்திய ஒன்றிய செயலாளர் உமா கன்னுரங்கம் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. விழாவை தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200 காளைகள் போட்டியில் பங்கேற்றன. குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டது.

ரூ.2 லட்சம் பரிசு

ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டரின் காளை முதல் பரிசாக ரூ.2 லட்சம் தட்டி சென்றது. இரண்டாவது பரிசாக ரூ.1½ லட்சம் திருப்பத்தூர் அடுத்த கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த காளைக்கும், மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்த காளைக்கும் வழங்கப்பட்டது.

சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

சிறுவனுக்கு பாராட்டு

25-வது பரிசை பெற்ற காளையின் உரிமையாளர் தவறுதலாக சாலை ஓரத்தில் ரூ.8,500 பண பரிசு கவரை தவற விட்டுள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த பரமேஷ் என்பவரின் மகன் சகிமிதுன் என்ற 8-ம் வகுப்பு மாணவன் கண்டெடுத்து அங்கிருந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியிடம் ஒப்படைத்தான். அவனுக்கு, இன்ஸ்பெக்டர் மாலை அணிவித்து பரிசு வழங்கி பாரபாட்டினார்.


Next Story