தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள்
இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். காளைகள் முட்டியதில் 72 பேர் காயமடைந்தனர்.
வீர விளையாட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித அன்னை ஆரோக்கிய தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் தேதியில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கடந்த 6-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போதுமான முன்னேற்பாடு பணிகள் செய்யாததால் ஜல்லிக்கட்டுக்கு கலெக்டர் கவிதாராமு கடந்த 5-ந் தேதி அனுமதி மறுத்தார். சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டல் நடைமுறைகளை செய்தபின் அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.
முதல் ஜல்லிக்கட்டு
இந்த நிலையில் போதுமான ஏற்பாடுகளை செய்தபின் ஜல்லிக்கட்டு 8-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்றது. தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்த பின் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 15 காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. இதனை யாரும் பிடிக்கவில்லை.
அப்போது மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகள் நடந்தது. தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டினை தொடங்கி வைத்தனர். அதன்பின் மாடுபிடி வீரர்கள் காளைகளை துன்புறுத்த மாட்டேன், விதிமுறைகளை கடைப்பிடிப்பேன் என கலெக்டர் கவிதாராமு தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
போட்டிப்போட்டு அடக்கினர்
இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். காளைகளும் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த படி சென்றன. வீரர்களும் அதனை போட்டிப்போட்டு அடக்கினர். காளையின் திமிலை இறுகபிடித்து அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஆட்டம் காட்டியது. களத்தில் நின்று விளையாடி மாடுபிடி வீரர்களை பந்தாடியது.
மேலும் தனது கொம்பு மற்றும் காலால் வீரர்களை ஒரு பதம் பார்த்தது. சில காளைகளை வீரர்கள் பிடிக்க பயந்து இரும்பு பேரிகார்டில் ஏறி நின்று கொண்டனர். மொத்தம் 500 காளைகள் பங்கேற்றன. 270 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டினை பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். வீடுகளின் மாடியில் ஏறி நின்றும், மரங்களின் மேல் ஏறி நின்றும் பார்த்தனர். மேலும் உற்சாக குரல் எழுப்பினர். இடையிடையே மழை தூறியபடி இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழையிலும் பொதுமக்கள் நனைந்தபடி ஜல்லிக்கட்டினை பார்வையிட்டனர். சிலர் குடையை பிடித்தப்படியும் நின்றதை காணமுடிந்தது
72 பேர் காயம்
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் நாற்காலி, கட்டில், பீரோ, மிக்சி, குக்கர், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவையும், ரொக்கப்பரிசினையும் அள்ளிச்சென்றனர். இதேபோல வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 17 காளைகளை பிடித்த மாடுபிடி வீரருக்கு புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரை சேர்ந்த யோகேஷ், சிறந்த காளை என தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருக்கு முதல் பரிசாக தலா ஒரு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் உள்பட மொத்தம் 72 பேர் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 11 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
சுவர் இடிந்து விழுந்தது
போட்டியின் போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. சார்பில் பரிசுகளை வழங்கினார். இதேபோல புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் தி.மு.க.வினர் பரிசுகளை அறிவித்து வழங்கினர். அ.தி.மு.க.வினர் பரிசு வழங்கிய போது கோஷம் எழுப்பியதால் தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் அரசியல் பேச வேண்டாம் என மைக்கில் கூறியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெற்றதை வீடுகளின் மாடியில் இருந்து பொதுமக்கள் பார்வையிட்டனர். இதனால் அந்த தெருவில் உள்ள வீடுகளின் மாடியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஒரு புதிய வீட்டில் மாடிப்படி கட்டும் பணி நடந்து சிமெண்டு பூச்சு இல்லாத சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமில்லை. ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 8.15 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி அளவில் முடிவடைந்தது. முன்னதாக போட்டி தொடக்க நிகழ்வில் சின்னதுரை எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் உள்பட விழாக்குழுவினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.