ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரசார் ரெயில்மறியல்-50 பெண்கள் உள்பட 463 பேர் கைது


ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து  காங்கிரசார் ரெயில்மறியல்-50 பெண்கள் உள்பட 463 பேர் கைது
x

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 50 பெண்கள் உள்பட 463 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ரெயில்மறியல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். நேற்று காலை சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் காங்கிரசார் ஊர்வலமாக ரெயில் நிலையம் நுழைவு வாயில் அருகே சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கைது

அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து 4-வது பிளாட்பாரத்திற்குள் சென்று சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 30 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி இரும்பாலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். இந்த ரெயில் மறியலினால் சுமார் 10 நிமிடம் கால தாமதமாக ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

ஆத்தூர், சங்ககிரி

இதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் ஏராளமானவர்கள் ஆத்தூரில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து ரெயில் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சக்கரவர்த்தி, ஓசுமணி, கனகராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ், ஆத்தூர் நகர தலைவர் முருகேசன் உள்பட 175 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 15 பெண்கள் அடங்குவர். இவர்கள் உடையாபாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமானவர்கள் மறியல் போராட்டம் நடத்துவதற்காக சங்ககிரி ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்களை சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 5 பெண்கள் உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த சாலைமறியலில் 50 பெண்கள் உள்பட 463 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


Next Story