ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு: சென்னையில் காங்கிரசார் மவுன போராட்டம்


ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு: சென்னையில் காங்கிரசார் மவுன போராட்டம்
x

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் காங்கிரசார் நேற்று மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிபோனது. இதனை கண்டித்து கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி மவுன போராட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், எம்.பி. ரஞ்சன்குமார் உள்பட மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

பதவி நீக்கம்

போராட்டம் தொடர்பாக திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி 10 நிமிடங்கள் ஆற்றிய உரை, பா.ஜ.க. ஆட்சியையும், அக்கட்சியையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ராகுல்காந்தி சொன்ன அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரை மீண்டும் நாடாளுமன்றத்தில் உரையாற்ற விடாமல் தடுப்பதற்காக பழைய வழக்கை எடுத்து, நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்று ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்தனர்.

பிரதமர் வேட்பாளர்

இதனை காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக சந்தித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இதில் ராகுல்காந்திக்கு நீதி கிடைக்கும். எனவே அவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய சூழல் உருவாகும். அவர்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர். ராகுல்காந்திதான் பிரதமராக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, துணை தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, விஜய் வசந்த் எம்.பி., பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாநில செயலாளர் பி.வி.தமிழ்செல்வன், ஆர்.டி.ஐ. பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன், செயலாளர் சூளை ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட ஏராளமான நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மவுன போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் காங்கிரஸ் கட்சியினர் சிலர் பேசிக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.


Related Tags :
Next Story