ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கண்ணீர் சிந்திய ராகுல்காந்தி


ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கண்ணீர் சிந்திய ராகுல்காந்தி
x

இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய ராகுல்காந்தி கண்ணீர் சிந்தினார்.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னை வந்த அவர் நேற்று காலை 6.30 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றார். அங்கு செவ்வந்தி மற்றும் மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தன் தந்தையின் நினைவிடம் வந்த ராகுல்காந்தியின் முகத்தில் புன்னகை காணாமல் போய், பெரும் சோகம் குடிகொண்டிருந்தது. நினைவிடத்தில் இரு கைகூப்பி வணங்கிய ராகுல்காந்தி, பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.

7 கலசங்களில் புனித நீர்

தொடர்ந்து ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அரச மரக்கன்று ஒன்றையும் அவர் நட்டு வைத்தார். பின்னர், வீணை காயத்ரியின் இசை அஞ்சலியை கேட்டப்படி, அங்குள்ள புல் தரையில் அவர் உட்கார்ந்து சுமார் 16 நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்றனர்.

ராஜீவ்காந்தி படுகொலையின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசியா மற்றும் ராஜீவ்காந்தியுடன் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினரும் அங்கு அமர்ந்திருந்தனர்.

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காவிரி, நர்மதா, கங்கை, கோதாவரி, யமுனா, மெக்காவில் இருந்து ஜம்ஜம் நீர், இயேசுநாதர் ஞானஸ்தானம் செய்த ஜோர்தான் நதிநீர் என புனித நீர் 7 கலசத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ஆந்திர மாம்பழம்

மேலும் ராஜீவ்காந்திக்கு பிடித்த ஆந்திர மாம்பழங்கள் வரவழைக்கப்பட்டு அவரது நினைவிடத்தில் வாழை இலையில் 3 பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருவதற்கு முன்பாக தனது வீட்டில் ராஜீவ்காந்தி இந்த வகை மாம்பழங்களைதான் அவர் சாப்பிட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர்.

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி மிகுந்த சோகத்துடனே காணப்பட்டார். தன் தந்தையின் நினைவிடத்தை அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்.

கண்ணீர் விட்டார்

குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு கடைசியாக ராஜீவ்காந்தி நடந்து வந்த பாதையில் பூக்கள் தூவப்பட்டு அடையாளம் காணப்பட்டு இருந்தது. அதனை ராகுல்காந்தியிடம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் நினைவு கூர்ந்தனர்.

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் குண்டுவெடிப்பு நடக்கும்போது அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் சின்னாபின்னமாகி அந்தரத்தில் பறப்பது போன்றும், ராஜீவ்காந்தி மிரட்சியுடன் தரையில் சாய்வது போன்ற ஓவியம் வைக்கப்பட்டிருந்தது.

இதனை சிறிது நேரம் பார்த்துகொண்டிருந்த ராகுல்காந்தி உள்ளம் கலங்கி போனார். அந்த நேரத்தில் அவரது கண்கள் கலங்கி, கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தது. கண்ணீரை துடைத்த ராகுல்காந்தி திடீரென்று தன்னந்தனியாக எழுந்து தன் தந்தைக்கு மீண்டும் அஞ்சலி செலுத்த சென்றார். இந்த முறை மிகவும் உணர்ச்சிகரமாக அவர் காணப்பட்டார். இரு கைகளை கூப்பியபடி ஒரு சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தினார்.

புகைப்படம் எடுத்துக்கொண்டார்

தந்தை துயில் கொண்ட இடத்தை மீண்டும் சுற்றி வந்தார். பின்னர் வீணை காயத்திரி அருகே சென்ற ராகுல்காந்தி, 'நீங்கள் நன்றாக வாசித்தீர்கள், நன்றி' என்று கூறினார்.

தொடர்ந்து, ராஜீவ்காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் ராஜீவ்காந்தியுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ராகுல்காந்தி குழு புகைப்படம் எடுத்து கொண்டார். முன்னதாக நினைவிட நுழைவுவாயிலில், காங்கிரஸ் கொடியை ராகுல்காந்தி ஏற்றினார்.

அங்குள்ள பாதுகாப்பு அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி பயணம்

நினைவிடத்தில் இருந்து காலை 7.45 மணிக்கு ராகுல் காந்தி புறப்பட்டார். சுமார் 20 நிமிடங்கள் நினைவிடத்தில் ராகுல்காந்தி இருந்தார். பின்னர், ராகுல் காந்தி மீண்டும் சென்னை திரும்பினார்.

சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு அவர் சென்றார்.


Next Story