அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம்


அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம்
x

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று சென்னையில் நடந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் தேர்தல் அதிகாரி கவுரவ் கோகாய் எம்.பி., உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அஞ்சலி நிம்பல்கர் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்ல பிரசாத் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், எம்.கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணைத்தலைவர் கோபண்ணா, எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 652 பேர் கலந்துகொண்டனர்.

ராகுல்காந்தி

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியில் மக்களை பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கி பெருமை சேர்த்த ராகுல்காந்திக்கு லட்சோபலட்சம் தமிழக காங்கிரஸ் கட்சியினர் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

* 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் வெற்றி பெறவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் ஏகமனதாக கேட்டுக்கொள்கிறது. இந்த பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வதே ஒளிமயமான இந்தியாவுக்கு வழிவகுக்கும் என உறுதியாக நம்புகிறோம்.

சோனியா காந்திக்கு அதிகாரம்

* மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, நியமிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வழங்குவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மராட்டியம், பீகாரிலும் தீர்மானம்

ராஜஸ்தான், சத்தீஷ்கார், குஜராத், தமிழகத்தை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று மராட்டியம், பீகார் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, நியமிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அகில இந்திய தலைவருக்கு வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்படுவதற்கு முன்பும் இதுபோன்ற தீர்மானங்களை மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. ஆனால் மக்களவை தேர்தலில் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு அந்த பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகிவிட்டார்.


Next Story