ராகுல்காந்தி பாதயாத்திரை வெற்றி பெற்றுள்ளது


ராகுல்காந்தி பாதயாத்திரை வெற்றி பெற்றுள்ளது
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் நாளை மறுநாள் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவரது பாதயாத்திரை வெற்றி பெற்றுள்ளது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் நாளை மறுநாள் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவரது பாதயாத்திரை வெற்றி பெற்றுள்ளது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

ராகுல்காந்தி கூடலூர் வருகை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கேரள மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்தை வந்தடைகிறார். பின்னர் 6 கி.மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்து கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பொதுக்கூட்ட மேடையில் ராகுல்காந்தி பேசுகிறார். பின்னர் 30-ந் தேதி கர்நாடகாவுக்கு சென்று பாதயாத்திரையை தொடங்குகிறார். தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கூடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.

சிறப்பான வரவேற்பு

கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக கே.எஸ்.அழகிரி பேசும்போது கூறியதாவது:-

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்திக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இதேபோல் பா.ஜ.க.வுடன் அரசியல் பயணம் மேற்கொண்ட சிவசேனா மற்றும் நிதிஷ், லாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பா.ஜ.க. அச்சமடைந்துள்ளது.

இந்திய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்து ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.

திசை திருப்பவே சோதனை

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி பாதயாத்திரை வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையை மக்களிடம் இருந்து திசை திருப்பவே மத்திய அரசு என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.

மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என இதுவரைக்கும் மத்திய அரசு விளக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், எம்.பி.க்கள் ஜோதிமணி, ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



Next Story