கூடலூருக்கு ராகுல் காந்தி இன்று வருகை
கூடலூருக்கு ராகுல் காந்தி இன்று வருகிறார். இதையொட்டி 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கூடலூர்,
கூடலூருக்கு ராகுல் காந்தி இன்று வருகிறார். இதையொட்டி 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ராகுல் காந்தி வருகை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கேரளாவில் மேற்கொண்டார். நேற்று 21-வது நாளாக மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். தொடர்ந்து நிலம்பூர், வழிக்கடவு வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைகுளத்தை இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு வந்தடைகிறார். அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் பாத யாத்திரையாக கோழிப்பாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா, துப்புக்குட்டி பேட்டை வழியாக கூடலூர் பழைய பஸ் நிலையம் வந்தடைகிறார். அப்போது ஆதிவாசி மக்கள், படுகர், தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து மெயின் ரோடு வழியாக நடந்து சென்று புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்ட மேடையில் மாலை 5 மணிக்கு பேசுகிறார்.
500 போலீசார் பாதுகாப்பு
பின்னர் இரவு 7 மணிக்கு கூடலூர் தனியார் பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கேரவன் வேனில் தங்கி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு புறப்பட்டு கர்நாடகா சென்றடைகிறார். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூர் நகரில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தங்கும் விடுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட நேரம் வரை வாகனங்களை இயக்க அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். இதேபோல் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் மாலை 3 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.