டாக்டர் வீட்டில் டெல்லி போலீசார் சோதனை
டாக்டர் வீட்டில் டெல்லி போலீசார் சோதனை செய்தனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கடகைக்காரதெருவை சேர்ந்த தம்பதியர் வெள்ளைக்கண்ணு, ஜோதிமணி. மேலூரில் செக்கடிபஜாரில் வெள்ளைக்கண்ணு ஒரு மருந்து கடை நடத்தினார். இவரது மகன் விக்னேஷ். இவர் ரஷ்யாவில் மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து மதுரை ஒத்தக்கடையில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவகங்கையில் டாக்டராக பணிபுரிகிறார். இந்நிலையில் மேலூரில் விக்னேஷ் வசித்த வீட்டில் சென்னையில் இருந்து வந்த டெல்லி போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். மாலை 4 மணியளவில் இருந்து இரவு 8 மணி வரை சோதனை நடைபெற்றது.
சோதனை முடிந்த பின்னர் போலீசார் பை ஒன்றுடன் வந்து காரில் ஏறிச்சென்றனர். விக்னேஷ் அவரது ஆஸ்பத்திரியில் குறைந்த செலவில் சிகிச்சை அளித்ததால் நோயாளிகள் கூட்டம் அதிகமாகி விக்னேஷ் பிரபலமானதாகவும், அவரது மருத்துவ படிப்பு தொடர்பாக யாரோ டெல்லி இந்திய மருத்துவ கவுன்சிலில் பொய்யான புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாகவும், சோதனையின்போது ரஷ்யாவில் படித்த படிப்பு ஆவணங்கள், இந்தியாவில் பிராக்டிஸ் செய்தது குறித்த ஆவணங்கள் உள்பட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து, தேவையானவற்றை எடுத்து சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.