பாப்பிரெட்டிப்பட்டியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை-கணக்கில் வராத ரூ.38 ஆயிரம் சிக்கியது
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத ரூ.38 ஆயிரம் சிக்கியது.
லஞ்ச ஒழிப்பு சோதனை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் சார்பதிவாளராக சேலத்தை சேர்ந்த இந்திரா (வயது 33) என்பவர் பணியாற்றி வருகிறார். இளநிலை உதவியாளராக ஸ்டீபன் (33), ஆவண எழுத்தராக நாகவர்மன் (35), தற்காலிக பணியாளர்களாக ஜீவானந்தம் (38), பிரசாந்த் (33) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன. அதன்பேரில் நேற்று மாலை 3 மணிக்கு தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் 6 போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.
ரூ.38 ஆயிரம் சிக்கியது
இந்த சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.38 ஆயிரம் சிக்கியது. இந்த பணம் குறித்து சார் பதிவாளர் இந்திரா மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தி, கையெழுத்து பெறப்பட்டது.
பின்னர் இரவு 7 மணிக்கு சோதனை நிறைவடைந்தது. ரூ.38 ஆயிரம் கைப்பற்றப்பட்டது குறித்து சார் பதிவாளர் மற்றும் அலுவலர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். முன்னதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை குறித்து தகவல் அறிந்த பத்திரப்பதிவு எழுத்தர்கள் தங்களது கடைகளை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.