பாலக்காடு-திருச்செந்தூர் ெரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு


பாலக்காடு-திருச்செந்தூர் ெரயிலில்   கூடுதல் பெட்டி இணைப்பு
x
திருப்பூர்

போடிப்பட்டி:

வைகாசி விசாகத்தையொட்டி பாலக்காடு திருச்செந்தூர் ெரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாக தென்னக ெரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மிகத் தலங்கள்

பாலக்காடு-திருச்செந்தூர் மார்க்கமாக தினசரி முன்பதிவில்லாத விரைவு ெரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ெரயில் தினசரி அதிகாலை 4.55 மணிக்கு பாலக்காட்டிலிருந்து கிளம்பி மாலை 3.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு கிளம்பி இரவு 10.30மணிக்கு பாலக்காடு சென்றடைகிறது.

உடுமலை வழியாக செல்லும் இந்த ெரயில் பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் 2 படை வீடுகளை இணைக்கும் வகையிலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட புகழ் பெற்ற ஆன்மிகத் தலங்களுக்கு செல்லும் வகையிலும் உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த ெரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

கூடுதல் பெட்டி

பொள்ளாச்சி, உடுமலை, பழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு சென்று வருவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதுதவிர வேலைக்கு செல்பவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள் என பலரும் பயன்படுத்துவதால் பெரும்பாலான நேரங்களில் இந்த ெரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த ெரயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் 10 பயணிகள் பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ெரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி நடைபெறவுள்ள திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி அதிக பக்தர்களின் வருகை இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலில் வருகிற 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையும், திருச்செந்தூரிலிருந்து பாலக்காடு செல்லும் ெரயிலில் வரும் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படவுள்ளது. இது ெரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும் நெல்லை-திருச்செந்தூர் இடையே வரும் 12-ந்தேதி முன்பதிவில்லாத சிறப்பு ெரயில் இயக்கப்படவுள்ளது.


Next Story