ரெயில் மூலம் 3,700 டன் பச்சரிசி அனுப்பி வைப்பு
தர்மபுரியில் இருந்து திண்டுக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு ரெயில் மூலம் 3,700 டன் பச்சரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் இருந்து திண்டுக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு ரெயில் மூலம் 3,700 டன் பச்சரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரிசி ஆலைகள்
தமிழகத்தில், தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் சுமார் 50 லட்சம் டன் நெல் அரவை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பழைய தர்மபுரி, எஸ்.கொட்டாவூர், வேடியப்பன் திட்டு, மதிகோன்பாளையம், பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 70 நெல் அரவை ஆலைகள் உள்ளன. இதை நம்பி சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் நெல் அரவை ஆலைகளுக்கு வழங்கி வருகிறது. இங்கு அரவை செய்த அரிசியை தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கின்றன. இந்த அரிசி ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
வெளிமாவட்டங்களுக்கு...
தற்போது வெளிமாவட்டங்களுக்கு தேவையான பச்சரிசியை தர்மபுரி மாவட்ட நெல் அரவை ஆலைகளில் அரவை செய்து அனுப்பப்படுகிறது. அதற்கான நெல் டெல்டா மாவட்டங்களில் இருந்து பெறப்படுகிறது. கடந்த மாதம் தர்மபுரியில் இருந்து திண்டுக்கல்லுக்கு 1,250 டன் பச்சரிசி சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தர்மபுரி ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு 1,240 டன்னும், கோவை வடக்கு மாவட்டத்திற்கு 1,210 டன்னும் மொத்தம் 3,700 டன் பச்சரிசி 42 வேகன்களில் அனுப்பி வைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்துள்ளதால் கடந்த ஆண்டைவிட கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 10,177 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக 7 ஆயிரம் ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டு நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.