தண்டவாள சீரமைப்பு பணி தொடக்கம்
திண்டுக்கல்-பழனி ரெயில் வழித்தடத்தில் தண்டவாள சீரமைப்பு பணி தொடங்கியது.
தண்டவாள சீரமைப்பு
ரெயில்வே துறை சார்பில், ரெயில் தண்டவாளங்களில் நவீன எந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்-பழனி வழித்தடத்தில் ஒட்டன்சத்திரம் வரை தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
காலையில் மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி வழியாக கோவை செல்லும் பயணிகள் ரெயில் திண்டுக்கல்லை கடந்த பிறகு இந்த பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் தொடங்கப்படுவறகு முன்பு திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அருகே உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதையடுத்து தண்டவாள சீரமைப்பு பணிகள் தொடங்கின.
நவீன எந்திரம் மூலம் ஆய்வு
முதற்கட்டமாக தண்டவாளத்தில் ஜல்லிக்கற்களை மூடியபடி இருக்கும் மணல் நவீன எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அதே எந்திரம் மூலம் ஜல்லிக்கற்கள் சலிக்கப்பட்டும் மீண்டும் தண்டவாள பகுதியில் நிரப்பட்டன. பின்னர் தண்டவாளம் சமநிலையில் உள்ளதா? என்றும் அந்த எந்திரம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பணி நடந்தது. மணலை அப்புறப்படுத்திய போது அந்த பகுதி முழுவதும் புழுதி பறந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். சீரமைப்பு பணிகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், திண்டுக்கல்-பழனி வழித்தடத்தில் ஒட்டன்சத்திரம் வரை முதற்கட்ட தண்டவாள சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு மாத காலத்துக்குள் இந்த பணிகள் முடிவடையும் என்றனர்.