2-வது நாளாக பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு
பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு சென்ற ரெயிலில் நேற்றும் பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் அங்குமிங்கும் அலைமோதி கடும் அவதிக்குள்ளாகினர்.
திருச்செந்தூர் ரெயில்
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் வரை பயணிகள் ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து உடுமலைக்கு காலை7.10மணிக்கு வந்துசெல்லும். இந்த ரெயில் வரும்போதே ரெயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் திருச்செந்தூர் செல்லும்ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து ஏறும் பயணிகளுக்கு உட்காருவதற்கு இடம் கிடைப்பதில்லை. பழனி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களுக்கு சென்றபிறகுதான் சிலருக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்கிறது. அதுவரை நின்று கொண்டே பயணம் செய்கின்றனர்.
இந்த ரெயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும். பயணிகள் கூட்டம் அதிகமாக வருவதால் பெட்டிகளின் எண்ணிக்கையை 13 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெட்டிகள் குறைப்பு
அதுவும் தற்போது கந்தசஷ்டி சூரசம்காரத்திருவிழாவையொட்டி திருச்செந்தூருக்கு 13 பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் திருச்செந்தூர் சென்ற ரெயிலில் 9 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தது. அதனால் உடுமலை ரெயில் நிலையத்தில் பயணிகள் அங்குமிங்கும் அலைமோதினர்.
ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்ததால் தான் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் பயணிகளுக்கான பெட்டிகள் 9 மட்டுமே இணைக்கப் பட்டிருந்தது. அதனால் பயணிகள் நேற்றும் அங்குமிங்கும் அலைமோதினர். இதனால் தொடர்ந்து இவ்வாறு பெட்டிகள் குறைந்த அளவில் இணைக்கப்பட்டுதான் இயக்கப்படுமா என்ற சந்தேகம் ரெயில் பயணிகளுக்கு வந்துள்ளது.
பயணிகள் புலம்பல்
கோவில் விழாக்களின் போது இப்படி ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது சரியா என்று பயணிகள் புலம்பினர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால், ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்காமல் அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.