தண்டவாள இணைப்பு பணி - தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
தண்டவாள இணைப்பு பணி காரணமாக தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் வருகிற 6-ந் தேதி வரை நடக்க இருப்பதால் தென்மாவட்ட ரெயில்களில் வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதற்கிடையே, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரெயில்கள்மதுரை ரெயில் நிலையம் வராமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
மதுரை-சண்டிகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12687) இன்றூு (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 4-ந் தேதிகளில் மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16106) வருகிற 28-ந் தேதி வரையிலும், செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12662) வருகிற 3-ந் தேதி வரை மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாது.
நெல்லை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12632) வருகிற 28-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி வரை, கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16824) மற்றும் கொல்லம்-சென்னை (தென்காசி வழி) எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16102) ஆகியவை வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்கிறது. இந்த ரெயில்கள் மேற்கண்ட நாட்களில் மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாது.