திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு


திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு
x
திருப்பூர்


கோடை விடுமுறை எதிரொலியாக திருப்பூர் வழியாக சென்று, வரும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள் ஜூன் மாதம் முதல் வாரம் வரை காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை விடுமுறை

பள்ளி, கல்லூரிகளை பொறுத்தவரை கோடை விடுமுறை என்பது மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் நீண்ட விடுமுறையாகும். இந்த விடுமுறையை மாணவர்களும், பெற்றோரும் வெவ்வேறு வகைகளில் கழிப்பார்கள். ஒரு சிலர் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பிரதேசங்களுக்கும், பலர் சுற்றுலா தலங்களுக்கும் குடும்பத்துடன் செல்கின்றனர்.

ஒரு சிலர் தங்களது சொந்த ஊர்களுக்கும் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூரில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த மக்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

ரெயில், பஸ்களில் கூட்டம்

இந்த நிலையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் திருப்பூரில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் தங்களது சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் போக்கும்,வரத்துமாக உள்ளனர்.

மேலும் தற்போது பள்ளிகளில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால் ஏராளமானோர் மேற்படிப்பு சம்பந்தமாகவும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பொது போக்குவரத்தான ரெயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

முன்பதிவு டிக்கெட் கிடைக்காத நிலை

குறிப்பாக கோவையில் இருந்து திருப்பூர் வழியாக சென்னை மார்க்கத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. இதேபோல் தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் மற்றும் பெங்களூரு, கேரளா மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட் இல்லை. அனைத்து ரெயில்களிலும் ஜூன் மாதம் முதல் வாரம் வரை முன்பதிவு டிக்கெட் 100 எண்களுக்கு மேல் வரை காத்திருப்பு பட்டியலில் உள்ளது.

பாதுகாப்பான பயணம்

இதனால் திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கும், வெளியூர்களில் இருந்து திருப்பூர் வருபவர்களும் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களில் பெரும்பாலானோர் ரெயில் பயணம் பாதுகாப்பாகவும், எளிதாகவும் கருதுவதால் அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது.

இதுகுறித்து நியூ திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோகுல் கூறியதாவது:-

நான் பணி நிமித்தமாக அடிக்கடி ரெயிலில் தமிழகம் முழுவதும் சென்று வருவேன். வழக்கமாக முன்பதிவு அல்லாத பெட்டிகளில் பயணம் செய்வேன். ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்தே அனைத்து ரெயில்களிலும் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருப்பதால், டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்தேன். ஆனால் கோடை விடுமுறை என்பதால் முன்பதிவு டிக்கெட்டும் கிடைக்காத நிலை உள்ளது என்றார்.

டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம்

திருப்பூரில் ஆன்லைன் சர்வீஸ் வழங்கும் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

திருப்பூர் தொழில்நகரம் என்பதால் வணிக ரீதியாகவும், சொந்த வேலையாகவும் ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் அதிகம். பொதுவாக வாரவிடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் டிக்கெட் கிடைப்பது கஷ்டம். தற்போது கோடை விடுமுறை என்பதால் இந்த மாதம் முழுவதும் அனைத்து நகரங்களுக்குமே ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் காத்திருப்பு பட்டியலில்தான் உள்ளது.

ரெயில் டிக்கெட் முன்பதிவில் அதிக அளவு எண்ணிக்கையில் இருப்பதால் காத்திருப்பு பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காவிட்டால் சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே டிக்கெட் முன்பதிவு செய்ய வருபவர்களிடம் முன்னதாகவே தெளிவாக எடுத்து கூறி விடுகிறோம். இதனால் இந்த மாதத்தில் டிக்கெட் முன்பதிவுக்காக வந்த பெரும்பாலானோர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடனேயே திரும்பி செல்கின்றனர் என்றார்.

சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்

கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில் பொதுமக்களின் நலன் கருதி திருப்பூர் வழியாக சென்னை, கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே இயக்கப்படும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் திருப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story