தட்டிக்கேட்ட பயணியை தாக்கிய ரெயில்வே ஊழியர்
திண்டிவனத்தில் தமிழ் மொழி தெரியாததால் டிக்கெட் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்ட பயணியை ரெயில்வே ஊழியர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்:
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவி. இவர் திண்டிவனத்தில் இருந்து சென்னை செல்வதற்காக திண்டிவனம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு டிக்கெட் எடுக்க கவுண்டருக்கு சென்றார். ஆனால் அங்கிருந்த ரெயில்வே ஊழியர், இந்தி மொழியில் பேசினார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. இதனால் அவர் டிக்கெட் கொடுக்க தாமதம் ஆனது. இதை தட்டிக்கேட்ட ரவியை, அந்த ரெயில்வே ஊழியர் தாக்கினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் திண்டிவனம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பயணிகளை சமாதானப்படுத்தினர். அப்போது, ரவியை தாக்கிய ரெயில்வே ஊழியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பயணிகள் கூறினர். இதையடுத்து ரெயில்வே ஊழியர் மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.