தேனியில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகள்; பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்


தேனியில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகள்; பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 26 April 2023 2:30 AM IST (Updated: 26 April 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

தேனி

தேனியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

ரெயில்வே மேம்பாலம்

மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 9.35 மணியளவில் தேனிக்கு வரும் இந்த ரெயில், மாலை 6.15 மணியளவில் தேனியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறது. ரெயில் வந்து செல்லும் நேரங்களில் பெரியகுளம் சாலை, மதுரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த 2 சாலைகளிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மதுரை சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆமை வேகத்தில் பணிகள்

இந்த மேம்பாலம் 1.2 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படுகிறது. மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டி பிரமாண்டமான கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆரம்ப காலத்தில் பணிகள் வேகமாக நடந்தன. ரெயில்வே பாலம் அமைப்பதற்காக 26 கான்கிரீட் தூண்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த 2 மாத காலமாக பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இடையில் 3 வாரத்துக்கும் மேல் பணிகள் எதுவும் நடக்காமல் முடங்கிக்கிடந்தன. பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

குறிப்பாக அரண்மனைப்புதூர் விலக்கில் இருந்து பங்களாமேடு இடைப்பட்ட பகுதியில் 7 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இங்கு இன்னும் பல தூண்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது. ஆனால், சாலையோரம் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. சாலையோரம் இருந்த வணிக கட்டிடங்கள் அகற்றப்பட்ட நிலையில், வீடுகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மாற்று இடம் இன்னும் வழங்கப்படவில்லை.

மாற்று இடம் தாமதம்

மாற்று இடம் கேட்டு போராடிய போதிலும் அந்த மக்களுக்கு மாற்று இடம் இன்னும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் 2 மாதங்களுக்கு முன்பே இங்குள்ள வீடுகளுக்கான மின்இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால், மின்சாரம் இன்றி பரிதவிப்போடு மக்கள் வசித்து வருகின்றனர். மாற்று இடம் வழங்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. அதேநேரத்தில் பாலம் அமைக்கும் பணிகள் மந்தமாக நடந்து வரும் அதே நேரத்தில் சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மேம்பாலம் அமைப்பதற்கு சாலையோர நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதம் அடைகிறது. அங்கு வசிக்கும் மக்கள் மாற்று இடங்களுக்கு சென்றால் தான் பணிகளை விரைவுபடுத்த முடியும். இல்லை என்றால் திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது" என்றார்.


Next Story