ரெயில்வே வருமானம் 29 சதவீதம் அதிகரிப்பு- கோட்ட மேலாளர் அனந்த் தகவல்


ரெயில்வே வருமானம் 29 சதவீதம் அதிகரிப்பு- கோட்ட மேலாளர் அனந்த் தகவல்
x

மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக கோட்ட மேலாளர் அனந்த் கூறினார்.

மதுரை


மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக கோட்ட மேலாளர் அனந்த் கூறினார்.

சுதந்திர தினவிழா

மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் சுதந்திர தின விழா அரசரடி ரெயில்வே மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர் அனந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரை கோட்ட ரெயில்வேயில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து, இதர பிரிவுகளின் கீழ் வரும் வருமானம் 2022-23-ம் நிதியாண்டில் கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் கோட்ட வருமானம் ரூ.418.45 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ.324.14 கோடியாக இருந்தது.

இந்த காலகட்டத்தில் சரக்கு போக்குவரத்து மூலம் 85.46 சதவீதமும், போக்குவரத்தில் 11.94 சதவீதமும் அதிகரித்துள்ளது. மதுரை கோட்டம் கடந்த மாதம் வரை 1.15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டை ஒப்பிடும் போது, 9 சதவீதம் அதிகமாகும்.

வேகம் அதிகரிப்பு

இதற்கிடையே, தேனியில் பார்சல் பதிவு அலுவலகம் திறக்கப்பட உள்ளது. கடந்த நிதியாண்டில் 442 கி.மீ. ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. பகவதிபுரம்-எடமன் (33 கி.மீ.) மற்றும் மதுரை-போடிநாயக்கனூர் (90 கி.மீ.) இடையே நடைபெற்று வரும் மின்மயமாக்கல் பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். கடந்த நிதியாண்டில் திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையே ரெயில்களின் வேகம் 110 கி.மீ.ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி, திருமங்கலம்-வாஞ்சி மணியாச்சி-நெல்லை ரெயில் வழித்தடத்தின் வேகம் மணிக்கு 100 கி.மீ. இருந்து 110 கி.மீ. ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் நெல்லை-தென்காசி வழித்தடம் 70 கி.மீ. வேகத்தில் இருந்து 110 கி.மீ. ஆகவும், மதுரை-ஆண்டிபட்டி-தேனி வழித்தடத்தில் 80 கி.மீ. இருந்து 100 கி.மீ. ஆகவும் (74.78 கி.மீ), மதுரை-திருமங்கலம் வழித்தட வேகம் 90 கி.மீ. இருந்து 100 கி.மீ. ஆகவும் (17.3 கி.மீ.) ஆக உயர்த்தப்பட்டது.

கலைநிகழ்ச்சி

திருப்பாச்சேத்தி, திருமயம், வெள்ளனூர், அய்யலூர், ஆறுமுகனேரி, கடம்பூர், குமாரமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் 7 நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவகங்கை, குமாரமங்கலம், கல்லல், தாமரைப்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் உயர்மட்ட பிளாட்பாரங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு கோட்ட கமிஷனர் அன்பரசு தலைமையில் நடந்தது. பின்னர், ரெயில்வே பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், பாதுகாப்பு படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. நிகழ்ச்சியில், கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு, கதிசக்தி தலைமை திட்ட மேலாளர் அய்யப்ப நாகராஜா மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story