மடத்துக்குளம் ெரயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை
அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வரும் மடத்துக்குளம் ெரயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வரும் மடத்துக்குளம் ெரயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தாலுகா தலைமையகம்
நீண்டதூரப் பயணத்துக்கான பெரும்பாலான பயணிகளின் தேர்வாக ெரயில் போக்குவரத்து உள்ளது. குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளோடு பயணிப்பவர்கள் கழிவறை, குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகள் கொண்ட ெரயில் பயணத்தை விரும்பி மேற்கொள்கின்றனர். ெரயில் கட்டணத்தை விட பஸ் கட்டணம் பல மடங்கு அதிகம் என்பதால் ெரயிலைத் தேர்ந்தெடுக்க பயணிகளைத் தூண்டுகிறது. ஆனாலும் தாலுகா தலைமையகமான மடத்துக்குளத்தில் செயல்பட்டு வரும் ெரயில் நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு பலரும் தயங்கும் நிலை உள்ளது.
இதுவே ெரயில் நிலைய மேம்பாட்டுக்கு முட்டுக்கட்டையாகவும் உள்ளது. எனவே இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வழிவகை செய்தால் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். பலவகையான தொழில்களையும் மேம்படுத்த முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
சீமைக் கருவேல மரங்கள்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
'மடத்துக்குளத்தை தலைமையகமாகக் கொண்டு தாலுகா உருவாக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டது. பல மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது. கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் மடத்துக்குளத்துக்கு பஸ் போக்குவரத்து போதுமான அளவில் உள்ளது. ஆனால் ெரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படாமலேயே உள்ளது. மடத்துக்குளம் ெரயில் நிலையத்தில் பெரும்பாலான ெரயில்கள் நின்று செல்வதில்லை. காலை, மாலை என 2 ெரயில்கள் மட்டுமே நின்று செல்கிறது. தற்போது கூடுதலாக கோவை-மதுரை விரைவு ெரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ெரயில் வரும் நேரம் மட்டுமே டிக்ெகட் கவுண்ட்டர் திறக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் ெரயில் கால அட்டவணை குறித்து தெரிந்துகொள்ள முடியாத வகையில் பயணிகள் பகுதியையும் சேர்த்து பூட்டிவைத்துள்ளனர். மேலும் ெரயில்நிலைய வளாகத்தில் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள், புதர்ச்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதுடன், பயணிகளை முட்கள் குத்தி காயப்படுத்தி வருகிறது.
சமூக விரோத செயல்கள்
ெரயில் நிலையத்தில் குடிநீர்க் குழாய்கள் மற்றும் கழிவறைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பலரும் ெரயில் நிலைய பிளாட்பாரத்தையே திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த் தொற்றும் உருவாகும் நிலை உள்ளது. ஆதரவற்றவர்கள், போதை ஆசாமிகள் என பலரும் ெரயில் நிலையத்திலுள்ள இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர்.
இவர்கள் படுத்திருப்பதால் ெரயில் பயணிகள் உட்கார இடமில்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் ெரயில் நிலையத்தில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. ெரயில் நிலைய வளாகத்திலேயே அமர்ந்து மது அருந்தி விட்டு அங்கேயே காலி பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். ஒருசில நாட்களில் இரவு நேரங்களில் இங்கு பெண்களின் நடமாட்டம் தெரிவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே ரெயில் நிலையம் பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும்.
தொழில் மேம்பாடு
முன்பதிவு வசதியுடன் முழுமையாக செயல்படும் வகையில் டிக்கெட் கவுண்ட்டர் அமைக்க வேண்டும். அத்துடன் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்க வேண்டும். மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் நூற்பாலைகள் மற்றும் காகித ஆலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த ெரயில் நிலையத்தில் சரக்குகளை கையாளும் வகையிலான வசதிகளை செய்து கொடுத்தால் இந்த பகுதியின் தொழில் மேம்பாடு அடையும்.
மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வெளியூர்களுக்குகொண்டு சென்று விற்பனை செய்ய உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ெரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். அனைத்து ெரயில்களும் நின்று செல்லும் நிலை ஏற்பட்டால் பல தரப்பினரும் ெரயில் பயணத்தை மேற்கொள்வார்கள். எனவே மடத்துக்குளம் ெரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.