தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வயது 162


தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வயது 162
x

தஞ்சை ரெயில் நிலையத்துக்கு 162 வயது தொடங்கியதையடுத்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை ரெயில் நிலையத்துக்கு 162 வயது தொடங்கியதையடுத்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தஞ்சை ரெயில் நிலையம்

தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும். தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 2-12-1861-ம் ஆண்டு தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது.திருச்சி-நாகை வழித்தடம், ஆங்கிலேயர்களின் வாணிப போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழித்தடம் அகல ரெயில்பாதையாக இருந்தது. பின்னர் மீட்டர்கேஜ் பாதையாக மாற்றப்பட்டு, தற்போது மீண்டும் அகல ரெயில் பாதையாக்கப்பட்டது.

தென்மாவட்டங்கள்

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லவும் முக்கிய வழித்தடமாக தஞ்சை இருந்தது. இந்த வழித்தடம் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் தஞ்சை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.தற்போது தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பைசாபாத், பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

162 வயது

தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும், 7 ரெயில்வே பாதைகளும் உள்ளன. நாள்தோறும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதால் தஞ்சை ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. மேலும் பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையம் முதன்மையாக விளங்கி வருகிறது. இப்படி சிறப்பான பயணிகள் பயன்பாட்டுடன் திகழ்ந்து வரும் தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கி 161-ம் ஆண்டு நிறைவடைந்து நேற்று 162-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இதை கொண்டாடும் வகையில் நேற்று காவிரி டெல்டா ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நடராஜன், செயலாளர் வெ.ஜீவக்குமார், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் சோமநாதராவ், செயலாளர் டி.சரவணன், தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க பொருளாளர் மாறன் ஆகியோர் தலைமையில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.மேலும் தஞ்சை ரெயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், ரெயில்வே முதன்மை வணிக ஆய்வாளர் தங்க.மோகன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பின்னர் ரெயிலில் வந்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன், வக்கீல்கள் உமர் முக்தர், முகமது பைசல், பேராசிரியர்கள் திருமேனி, செல்ல கணேசன், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story