நகர மறுக்குது நகரும் படிக்கட்டு..!


நகர மறுக்குது நகரும் படிக்கட்டு..!
x
திருப்பூர்


திருப்பூர் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு(எஸ்கலேட்டர்) அடிக்கடி பழுதாகி விடுகிறது. எனவே இதை முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

அடிக்கடி பழுது

திருப்பூர் மாநகருக்கு நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் தினமும் ஏராளமானவர்கள் தொழில் ரீதியாக பயணிப்பதால் ரெயில் நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பயணிகள் வந்து செல்வதும், அதிக அளவிலான பனியன் மூட்டைகள் ஏற்றி இறக்கப்படுவதுமாக ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டானது (எஸ்கலேட்டர்) அடிக்கடி பழுதாகி விடுவதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நகரும் படிக்கட்டு பயன்பாட்டில் இருந்த போது ஏராளமான பயணிகள் இதை பயன்படுத்தினர். குறிப்பாக இதன் அருகில் உள்ள நடைமேம்பாலத்தில் அதிக எண்ணிக்கையிலான படிக்கட்டுகள் இருப்பதால் பயணிகளுக்கு நகரும் படிக்கட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

முறையான பராமரிப்பு

இந்த நிலையில் தற்போது இந்த எந்திரம் அடிக்கடி பழுதடைவதால் பயணிகள் நடைேமம்பாலத்தின் படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். அதிகமான மூட்டை, முடிச்சுகளுடன் வரும் பயணிகள் மற்றும் வயதானவர்கள் படிக்கட்டுகளில் ஏற முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். முதல் நடைமேடையின் ஒரு முனையில் இறங்கும் வயதான பயணிகள் 2-வது நடைமேடைக்கு செல்வதற்காக அதே நடைமேடையின் மறு முனையில் அமைந்துள்ள லிப்டிற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

எனவே இந்த நகரும் படிக்கட்டை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், 2-வது நடைமேடையில் அமைக்கப்படும் லிப்டின் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?


Next Story