ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்
உடுமலை அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ரெயில்வே சுரங்கப்பாதை
உடுமலை-பழனிசாலையில் பெரியகோட்டை பிரிவை அடுத்துள்ளது முல்லை நகர். இந்த பகுதிக்கு அருகே கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட, மருள்பட்டி, மலையாண்டி, கவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ரெயில்வே தண்டவாளத்திற்கு கீழ் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைகாலங்களில் அதிக அளவு தேங்கி நிற்கும்போது இந்த சுரங்கப்பாதையில் எந்த வாகனங்களும் செல்லமுடியாதநிலை ஏற்படுகிறது. அவ்வாறு தேங்கிநிற்கும் தண்ணீர் மோட்டார் வைத்து குழாய்மூலம் வெளியேற்றப்படுகிறது. இருப்பினும்அந்த சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பி.ஏ.பி.கிளை கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் செல்லும்போது தண்ணீர் கசிவது, மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் நிலத்தடியில் இருந்து ஊற்று நீர் வருவது ஆகியவற்றால் இந்த சுரங்கப்பாதைக்கு தண்ணீர் வந்துகொண்டே உள்ளது. அதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் தரைப்பகுதியை பலப்படுத்தும் பணிகள் நடந்தன.
தேங்கி நிற்கும் தண்ணீர்
இந்த நிலையில் மீண்டும் தண்ணீர் கசிந்து பாலத்திற்கு வந்து தேங்கி நிற்கிறது.இந்த சுரங்கப்பாதைவழியாக சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்துசெல்கின்றனர். சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கும் போது அவர்கள் இந்த பாதையில் வந்து செல்வது பழக்கமாகிவிட்டது.இருப்பினும் இருசக்கர வாகனத்தில் வரும்போது கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாதையில் தளம் ஆங்காங்கு சேதமடைந்துள்ளதால் எந்த இடத்தில் சேதமடைந்துபள்ளமாகி தண்ணீர் அதிகம் தேங்கியுள்ளது என்று தெரியாத நிலையில், புதியதாக இருசக்கரவாகனத்தில் வருகிறவர்கள் அந்த சுரங்கப்பாதையில் தடுமாறி கீழே விழுகின்றனர். அதனால் அந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகமும், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.