சட்டவிரோத மென்பொருள் மூலமாக ரெயில் டிக்கெட் பதிவு செய்து மோசடி: பீகார் வாலிபர் கைது


சட்டவிரோத மென்பொருள் மூலமாக ரெயில் டிக்கெட் பதிவு செய்து மோசடி: பீகார் வாலிபர் கைது
x

சட்டவிரோத மென் பொருள் மூலமாக ரெயில் டிக்கெட் பதிவு செய்து மோசடி செய்த பீகார் மாநில வாலிபரை ரெயில் வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

வேலூரில் தனியார் ரெயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் கடைகளில் ஐ.ஆர்.சி.டி.சி. சாப்ட்வேருக்குள் சென்று விரைவாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து ரூ.200 முதல் ரூ.500 வரை கூடுதல் விலைக்கு விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முறைகேடாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்த 2 கடைகளில் சட்டவிரோதமான மென்பொருளை (சாப்ட்வேர்) பயன்படுத்தி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

பீகார் வாலிபர் கைது

விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் இந்த சட்டவிரோத மென்பொருளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பீகார் சென்று கடந்த 20-ந் தேதி மென்பொருளை விற்ற பீகார் மாநிலம் தானாபூர் பகுதியை சேர்ந்த சைலேஷ் யாதவ் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

3,485 பேரிடம் விற்பனை

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சைலேஷ் யாதவிடம் 10 சட்டவிரோதமான இணையதள மென்பொருள் இருந்தது. இதனை அவர் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் சுமார் 3,485 பேரிடம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை விற்று உள்ளார். இந்த 10 மென்பொருளின் மூலம் கடந்த 18 மாதத்தில் ரூ.98 லட்சத்து 20 ஆயிரத்து 946 அவருக்கு கிடைத்துள்ளது.

தீவிர விசாரணை

மேலும் இந்த சட்டவிரோத மென்பொருள் மூலம் ஒரு நாளைக்கு நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 460 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களில் இந்த மென்பொருள் மூலம் எடுக்கப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.56 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story