பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் ரெயில்வே சுரங்கப்பாதை பணி நிறுத்தம்
வரைபடத்தில் உள்ளதுபோல் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறவில்லை என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
ரெயில்வே சுரங்கப்பாதை
அரக்கோணம் - மும்பை ரெயில் மார்க்கத்தில் கைனூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டின் வழியாக சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கும், இதே போல் மறுமார்க்கத்தில் இருந்து காட்பாடி வழியாக தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்கின்றன.
இதனால் அவ்வபோது அந்த கேட் மூடியிருப்பதால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அவசர தேவைகளுக்காக செல்லும் பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் சுரங்க பாதை அமைப்பதற்கான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
பொதுமக்கள் மறியல்
இந்தநிலையில் அப்பகுதி கிராம மக்கள் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான வரைபடத்தை காண்பித்து பணிகள் தொடங்கிய பின் இப்போது அந்த வரைபடத்தில் உள்ளது போல் இல்லாமல் வளைவாக மாற்றி அமைத்து வருகின்றனர். இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, இந்த பணியை நிறுத்த வேண்டும் எனக்கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாசில்தார் சண்முக சுந்தரம், ரெயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.