நாமக்கல்லில் சூறைக்காற்றுடன் பலத்த மழை-விளம்பர பேனர்கள் காற்றில் பறந்தன


நாமக்கல்லில் சூறைக்காற்றுடன் பலத்த மழை-விளம்பர பேனர்கள் காற்றில் பறந்தன
x
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல்லில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால், ஆங்காங்கே விளம்பர பேனர்கள் காற்றில் பறந்தன.

சூறைக்காற்றுடன் மழை

நாமக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 28-ந் தேதியுடன் நிறைவு பெற்றாலும், வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக கடுமையாக இருந்து வந்தது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை வெயில் பொதுமக்களை சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த காற்றுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள், கடைகளின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் பறந்து சேதம் அடைந்தன. நாமக்கல்லில் திருச்சி சாலை ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் இருந்த புளியமரம் ஒன்று ஓட்டல் மேற்கூரையில் முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் சாலையோரங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ஆமை வேகத்தில் வாகனங்களை ஓட்டி சென்றனர். காற்றுடன் மழை பெய்ததால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நாமக்கல் நகரம் இருளில் மூழ்கியது. மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 8 மணி வரை நீடித்தது. இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story