ராசிபுரத்தில் ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழைபதிவு: அரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது-நோயாளிகள் கடும் அவதி


ராசிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு 20 சென்டிமீட்டர் மழைபதிவானது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்:

கொட்டித்தீர்த்த கனமழை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றது.

ராசிபுரம் பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதேபோல் ஆண்டகளூர் கேட், குறுக்கபுரம், குருசாமிபாளையம், முத்துக்காளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை, வடுகம், பட்டணம், காக்காவேரி, வையப்பமலை உள்பட சுற்று வட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. கனமழையால் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

ஏரி நிரம்பியது

மேலும் மழையால் ராசிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இரவில் தூக்கத்தை இழந்து மக்கள் தவித்தனர். ராசிபுரம் தட்டான்குட்டை ஏரி மழையால் நிரம்பி, தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்தது.

இதனால் அதில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் பருத்தி, சோளப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகின. இதேபோல் ராசிபுரம் உழவர் சந்தையின் சுற்றுச்சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் ஏற்படவில்லை.

ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது

இதனிடையே கனமழை காரணமாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியை தண்ணீர் சூழ்ந்தது. பின்னர் சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது. பிரசவ வார்டு உள்பட 4 வார்டுகளில் தண்ணீர் புகுந்து குளம்போல் தேங்கியது. இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரசவ வார்டுக்குள் புகுந்த தண்ணீரால் அங்கிருந்த கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்தன. இதனால் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் செய்வதறியாது திகைத்தனர். அவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றினர்.

இதேபோல் பெண்கள் வார்டிலும் தண்ணீர் புகுந்து நோயாளிகளின் கட்டில்களை சூழ்ந்து நின்றது. இதையடுத்து அவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வேறு வார்டுகளுக்கு மாற்றினர். சிலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்களது உறவினர்களை கைகளில் தூக்கியவாறு வேறு வார்டுகளுக்கு கொண்டு சென்றனர்.

கலெக்டர் ஆய்வு

இதேபோல் பெண்கள் வார்டு முன்பு இடுப்புக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதையடுத்து மழை நின்ற பிறகு ஆஸ்பத்திரியில் தேங்கி நின்ற மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. இதனிடையே மழைநீரை அப்புறப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வரும் காலங்களில் ஆஸ்பத்திரியில் மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ராசிபுரத்தில் ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story