பரவலாக மழை; சம்பா-தாளடி வயல்களில் தண்ணீர் தேங்கியது


பரவலாக மழை; சம்பா-தாளடி வயல்களில் தண்ணீர் தேங்கியது
x

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

சம்பா-தாளடி விதைகள்

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வந்த உடன் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். குறுவை சாகுபடி பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். இதற்காக நெல் விதைகளை விவசாயிகள் வயல்களில் தெளித்துள்ளனர்.

இந்த விதைகள் முளைத்து வரும் முன்னரே கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று பகல் முழுவதும் தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் சம்பா தாளடி விதைகள் தெளிக்கப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் விதைகள் சேதம் அடைந்து, முளைப்புத்திறன் குறைந்து விடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடி, மேலவாசல், மூவாநல்லூர், பரவாக்கோட்டை, கண்டிதம்பேட்டை, உள்ளிக்கோட்டை, திருப்பாலக்குடி, சுந்தரக்கோட்டை, பைங்காநாடு, சேரன்குளம், சவளக்காரன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. விடாது பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழைநீர் ஓடியது.

தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. விநாயகர் சதுர்த்தி நாளில் மழை பெய்ததால், பக்தர்கள் கோவில்களுக்கு செல்வதற்கு சிரமப்பட்டனர். சம்பா சாகுபடிக்கு விதை விதைப்பதற்கு விவசாயிகள் நெல்லை முளைகட்டி வைத்துள்ளனர். இந்த நேரத்தில் மழை பெய்ததால், விதைவிட முடியாமல் நெல் வீணாகும் சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

திருத்துறைப்பூண்டி-திருமக்கோட்டை

திருத்துறைப்பூண்டி பகுதியில் இன்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால், நெல் விதைத்த வயல்களில் பயிர்கள் முளைக்காமல் அழுகி விட்டதாகவும், உளுந்து, கடலை பயிர்களும் அறுவடை செய்ய முடியாமல் வீணாகி விட்டதாகவும் விவசாயிகள் சோகத்துடன் கூறினர்.


Next Story