காங்கயத்தில் 84 மில்லிமீட்டர் மழை
காங்கயம் பகுதியில் நேற்று முன்தினம் 84 மில்லி மீட்டர் மழை பதிவானது. மரம் வேரோடு சாய்ந்தது.
மழை
காங்கயம் பகுதியில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது சாரல் மழையும், லேசான மழையும், கன மழையும் பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து இரவு 9 மணியளவில் லேசாக தூறல் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து கனமழை பெய்தது.
காங்கயம் நகரம், சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் காங்கயம் நகர முக்கிய சாலைகளான திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மரம் வேருடன் சாய்ந்தது
இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றது. கன மழையானது இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது. மேலும் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் காங்கயம், குதிரைப்பள்ளம் சாலையில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. பின்னர் நேற்று காலை காங்கயம் நகராட்சி பணியாளர்கள் உடனடியாக மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். நேற்று காலை 6 மணி வரை காங்கயம் பகுதியில் 84 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு காங்கயம் பகுதியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.