தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் கனமழை: சாலை உடைந்து போக்குவரத்து பாதிப்பு தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின
தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் கனமழை: சாலை உடைந்து போக்குவரத்து பாதிப்பு தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலை உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
காட்டாற்று வெள்ளம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல்வேறு இடங்களில் ஏரிகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.
இதற்கிடையே தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி குந்துக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ராமச்சந்திரம் செல்லும் சாலையில் வெங்கடாபுரம் பகுதியில் சாலையின் குறுக்கே குழாய் பதித்து அதன் மீது சாலை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழையால் அங்கு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குழாய்களை இழுத்து சென்றது. மேலும் சாலை துண்டாகி போக்குவரத்து முடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர்.
தரைப்பாலங்கள் மூழ்கின
மேலும் தளியில் இருந்து காடுகெம்பத்தப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள 4 தரைப்பாலங்களும் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தரைப்பாலம் மீது தண்ணீரில் ஆபத்தை உணராமல் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் நடந்து சென்றனர்.
அஞ்செட்டியில் பெய்த கனமழையால் தொட்டல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தாவரக்கரை மற்றும் அர்த்தக்கூர் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதற்கிடையே தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள கால்வாயில் ஆக்கிரமிப்பு காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.