மந்தகதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

ராமேசுவரத்தில் மந்தகதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் மந்தகதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மழைநீர்
ராமேசுவரத்தில் மிக முக்கிய சாலை என்றால் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் செல்லும் சாலை தான். இந்த முக்கிய சாலையில் தான் லெட்சுமண தீர்த்தம் மற்றும் ராம தீர்த்தம் பகுதி அமைந்து உள்ளது. இந்த சாலை வழியாகவே ராமேசுவரம் வரும் அனைத்து சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றது.
ராமேசுவரம் பகுதியில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் லட்சுமண தீர்த்தம் முதல் ராம தீர்த்தம் வரை யிலான தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதையடுத்து ராமேசுவரத்தில் மிக முக்கிய சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுப்ப தற்காக லட்சுமண தீர்த்தம் முதல் திட்டக்குடி வரையிலும் சுமார் 1,450 மீட்டர் நீளத்தில் சாலை இருபுறமும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அரசு பல கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
வழக்கமாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மழை சீசன் தொடங்குவதற்கு முன்பே தொடங்கி முடித்துவிட வேண்டும். ராமேசுவரம் பகுதியிலோ தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் லெட்சுமண தீர்த்தம் முதல் திட்டக்குடி வரையிலும் மழை நீர் வடிகால் அமைப்பதற்கான பணிகள் கடந்த மாதம் தான் தொடங்கியது. பணி மந்தகதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
கோரிக்கை
ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு அதை சரியாக தூர்வாரி சீரமைக்காததால் தூர்ந்து போய் தற்போது மீண்டும் பல கோடி ரூபாய் நிதியில் மீண்டும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மழைநீர் வடிகால் பணிகளை தாமதப்படுத்தாமல் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தி விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படும்கஷ்டத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.