திருப்பூர், அவினாசி பகுதியில் பலத்த மழை
திருப்பூர், அவினாசி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூர், அவினாசி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை
திருப்பூர் மாநகரில் காலை வெயில் அடித்தது. அதன்பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது வெயில் அடித்தது. மாலை 3 மணிக்கு பிறகு தூறலுடன் மழை பெய்தது. அதன்பிறகு 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. இதன்காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். மழை காரணமாக திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டர் முன் கழிவுநீர் கால்வாய் நிரம்பி மழைநீர் ரோட்டில் பாய்ந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதுபோல் ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலத்தின் கீழ் கழிவுநீருடன், மழைநீர் கலந்து கருப்பு நிறமாக தண்ணீர் தேங்கியது. அந்த வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு அவினாசி ரோடு பகுதிகளில் மழை பெய்தது. திடீர் மழை காரணமாக விடுமுறை தினத்தன்று குடும்பத்துடன் வெளியே செல்ல நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அவினாசி
அவினாசி பகுதியில் நேற்று காலை முதல் பிற்பகல் 3 மணிவரை மிதமான வெப்பநிலை காணப்பட்டது. இதையடுத்து 3.30 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அவினாசி, ஆட்டையாம்பாளையம், வேலாயுதம்பாளையம், கருவலூர், தெக்கலூர், பழங்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ரோட்டின் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதில் சேவூர், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், கானூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆலத்தூர், தத்தனூர், பொங்கலூர், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்பட பல கிராமங்களில் மழை பெய்தது.