காங்கயம், குண்டடம் பகுதியில் பலத்த மழை
காங்கயத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து காணப்பட்டது. இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணியளவில் தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து மிதமான மழை பெய்தது.
காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. காங்கயம் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பின்னர் இரவு முழுவதும் தூரல் போட்டுக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் பருவமழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். மேலும் இங்கு கால்நடைகள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையும் மழை பெய்தது. இதனால் தீவன பயிர்கள் பயிர் செய்யவும் குடிநீர் பஞ்சமும் குறையும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் மகிச்சியடைந்துள்ளனர்.
----