பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்புஅமைச்சர் சக்கரபாணி பேட்டி


பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர்  பயிர்கள் பாதிப்புஅமைச்சர் சக்கரபாணி பேட்டி
x

பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தஞ்சையில், அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

தஞ்சாவூர்

பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தஞ்சையில், அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

மழை

காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த மாவட்டங்களில் 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு இருந்தன.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு தற்போது 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாராக உள்ளன. இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை மழை பெய்தது.

கணக்கெடுப்பு

பருவம் தவறி பெய்த இந்த திடீர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்திருந்த நெல்மணிகளும் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டன. நெற்பயிர்கள் மட்டுமின்றி உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட தானிய பயிர்களும் பாதிக்கப்பட்டன.

மழையால் எவ்வளவு ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கடந்த 2 நாட்களாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ஆய்வு

இந்தநிலையில் பயிர் சேத விவரங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவு, வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்வார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே புத்தூரில் பலத்த மழையால் சாய்ந்து கிடந்த நெற்பயிர்களை பார்வையிட்டார். அப்போது வயலில் அழுகி கிடந்த நெற்பயிர்களை விவசாயிகள் , அவரிடம் காட்டிவிரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை கேட்டறிந்த அமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.பின்னர் உக்கடை கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற அமைச்சர் சக்கரபாணி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தாமதம் இன்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என பணியாளர்களை அறிவுறுத்தினார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்களை(அமைச்சர்கள்) ஆய்வுக்கு அனுப்பி உள்ளார். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 42,305 ஏக்கரில் நெற் பயிர்களும், 2,468 ஏக்கரில் உளுந்தும், 1,163 ஏக்கரில் நிலக்கடலையும் என மொத்தம் 45,935 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன . இன்னும் அதிகாரிகள் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர். இது இறுதி பாதிப்பு அளவு இல்லை. பாதிப்பு அளவு கூடுதலாக வரவும் வாய்ப்பு உள்ளது.நாளை ( இன்று) சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்களில் தற்போது 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் 22 சதவீதம் வரை தளர்வு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கான முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டிருக்கிறார்.

11.40 டன் நெல் கொள்முதல்

தமிழகம் முழுவதும் 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டு கொள்முதல் செய்த அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்படும். நெல் அறுவடைக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அசோக்குமார், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் பிரபாகர், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story