கடலூா் மாவட்டத்தில் பல்லாங்குழி சாலைகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அதிகரிக்கும் விபத்துகள்
கடலூர் மாவட்டத்தில் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். மேலும் சாலையை சீரமைப்பது தொடர்பாக கண்டுகொள்ளாத அதிகாரிகளால் விபத்துகளும் அதிகரிக்கிறது.
கடலூர் மாநகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக இருப்பது இம்பிரீயல் சாலையாகும். சிதம்பரம், விருத்தாசலம் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் இருந்து கடலூருக்குள் வரும் வாகனங்களும், வடமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் இந்த சாலை வழியாக தான் செல்கின்றன.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இம்பிரீயல் சாலை கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்து பல இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது கடலூர் போக்குவரத்து கழக பணிமனை முதல் முதுநகர் வரை பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. இந்த சாலை சேதமடைந்து ஓராண்டாகியும் இதுவரை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
இதனால் வெளியூர்களில் இருந்து கடலூருக்கு வரும் வாகன ஓட்டிகள், பல்லாங்குழி சாலைகளால் வாகனங்களை சரிவர ஓட்டிச்செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுபற்றி அறிந்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நாளுக்கு நாள் விபத்துகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படும். மேலும் இம்பிரீயல் சாலையுடன், எஸ்.என்.சாவடி இணைப்பு சாலை இணையும் இடத்தில் சுமார் 1 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஆனால் அதில் இம்பிரீயல் சாலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலும், எஸ்.என்.சாவடி இணைப்பு சாலை மாநகராட்சி கட்டுப்பாட்டிலும் இருப்பதால் அதனை சீரமைக்க அதிகாரிகள் யாரும் முன்வருவதில்லை. எனவே அந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை விபத்துகள் அதிகரிப்பு
இதேபோல் சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் வரை சிதம்பரம் -கடலூர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. தற்போது அந்த பள்ளங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவியாய் தவிக்கின்றனர். மேலும் சிதம்பரம்- சீர்காழி புறவழிச்சாலையும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள நெடுஞ்சாலைகள் சேதமடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2-வது எடிசனுக்கு சிதம்பரம் படம் வைக்கவும்
லோக்கலுக்கு கடலூர் பயத்தை பயன்படுத்தவும்