திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை பெய்தது.
2-வது நாளாக மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை நேற்று காலையில் இருந்து இரவு வரை விட்டு, விட்டு மிதமாக பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்களும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் கையில் குடை பிடித்தப்படி சென்றதை காண முடிந்தது.
தொடர் மழையின் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மேடு, பள்ளமான சாலையில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.
வந்தவாசியில் அதிகபட்சம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் நேற்றைய நிலவரப்படி 128 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. 75-ல் இருந்து 100 சதவீதம் வரை 58 ஏரிகளும், 50-ல் இருந்து 75 சதவீதம் வரை 79 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 312 ஏரிகளும் நிரம்பி உள்ளது. 25 சதவீதத்திற்கு கீழ் 94 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. மீதமுள்ள 26 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படாமல் உள்ளது.
நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக வந்தவாசியில் 69.8 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
செய்யாறு-68, சேத்துப்பட்டு-46.8, ஆரணி-32, வெம்பாக்கம்-26, கீழ்பென்னாத்தூர்-18.6, கலசபாக்கம்-18, போளூர்-17.2, ஜமுனாமரத்தூர்-11, திருவண்ணாமலை-9.2, தண்டராம்பட்டு-8, செங்கம்-5.6 ஆகும்.