கழுகுமலை பகுதியில் மழை
கழுகுமலை பகுதியில் மழை பெய்தது.
கழுகுமலை:
கழுகுமலையில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இளநீர், பழரசம், மோர் மற்றும் குளிர்பானங்களை பருகி வந்தனர். இரவில் வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை 3 மணிவரை வெயில் அடித்தது. மாலை4 மணிக்கு வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென கழுகுமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தது. அரைமணி நேரம் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்தது. இந்த மழையால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அனல் காற்று வீசிய இப்பகுதியில் நேற்று இதமான சூழல் உருவாகியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.