கீழ்வேளூர் பகுதிகளில் பரவலாக மழை
கீழ்வேளூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கீழ்வேளூர், சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. இந்த நிலையில் மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலேயே கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனி, இரட்டைமதகடி, ஆந்தக்குடி. சிகார், தேவூர், பட்டமங்கலம், இலுப்பூர், சத்திரம், ராதாமங்கலம், செருநல்லூர், குருக்கத்தி, மணலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. மதியம் 12 மணி அளவில் தொடங்கிய மழை 45 நிமிடங்கள் நீடித்தது. வெயிலின் தாக்கத்தால் வெளியே வராமல் இருந்த மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.