தஞ்சை மாவட்டத்தில் மழை


தஞ்சை மாவட்டத்தில் மழை
x

பேராவூரணி, திருச்சிற்றம்பலம் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

தஞ்சாவூர்
பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர், மாலை 5 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் குளிர்ச்சி நிலவியது.

இந்த மழை நெல், கடலை, எள், உளுந்து மற்றும் தென்னை சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்சிற்றம்பலம்

இதேபோல, திருச்சிற்றம்பலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. கல்லணை கால்வாயின் கிளை வாய்க்காலில் வரும் காவிரி தண்ணீரை மட்டுமே நம்பி விவசாய பணிகளை தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் இருந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை தொடர்ந்து பெய்தால் ஆறு, ஏரி, குளங்கள் நிரம்புவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும். இதனால், விவசாய பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும். ஆகவே, தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்பதே திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் கனமழையாக ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதன்காரணமாக பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, கடலோர போலீஸ் நிலையம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.



Next Story