திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை
புயல் கரையை கடந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
புயல் கரையை கடந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்தது.
புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டம் திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர், பரவாக்கோட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. ஆனால் கனமழை பெய்யவில்லை. லேசான சாரல் மழை பெய்தது.
பாதிப்பு இல்லை
டெல்டா மாவட்டங்களில் லேசான மழை மட்டுமே பெய்ததால் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பியது. புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழகம் பகுதியில் நிலவி வருவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் அடித்து இயல்பான வானிலை நிலவியது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கனமழை இடைவிடாது வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலைக்கு மேல் குளிர்ந்த காற்று வீசியது.
மன்னார்குடி
புயல் கரையை கடந்த நிலையில் மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. மன்னார்குடியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு மழை பெய்தது. மன்னார்குடி, கோட்டூர், காரிக்கோட்டை, பாமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று மதியம் திடீரென மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, கோரையாறு, பொதக்குடி, பூதமங்கலம், விழல்கோட்டகம், வெள்ளக்குடி, சித்தாம்பூர், குடிதாங்கிச்சேரி, பழையனூர், பண்டுதக்குடி, ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், நாகங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது.