மழையில் நனைந்து கரையும் கல் உப்புகள்-தார்ப்பாய் கொண்டு மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?
மழையில் நனைந்து கரையும் கல் உப்புகள்-தார்ப்பாய் கொண்டு மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?
சாயல்குடி, மே.13-
கோடை மழையில் நனைந்து வீணாக கரைந்து ஓடிய கல் உப்புகள். தார்ப்பாய் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உப்பள பாத்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் உள்ளது தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அது போல் இந்த உப்பு நிறுவனத்திற்கு சொந்தமாக வாலிநோக்கம் பகுதியைச் சுற்றி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பள பாத்திகள் உள்ளன.
அதுபோல் ஆண்டுதோறும் இந்த உப்பளபாத்தியில் கோடைகால சீசன் தொடங்கியவுடன் மார்ச் மாதத்தில் இருந்து பாத்திகளில் மோட்டார் மூலம் கடல் நீர் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து அந்த கடல் நீரிலிருந்து கல் உப்பு உற்பத்தி செய்யப்படும். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கோடைகால சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் அரசு உப்பள நிறுவனத்திற்கு சொந்தமான உப்பள பாத்திகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே கல் உப்புகளை உற்பத்தி செய்யும் பணியானது தீவிரமாகவே நடைபெற்று வந்தது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கல் உப்புகள் பாத்திகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு பாத்திகள் அருகே மலை போல் குவித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு உப்பு நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உப்பு நிறுவனத்தில் கல் உப்புகள் மிஷின்கள் மூலம் அரைத்து அயோடின் பாக்கெட்டுகளாகவும் பேக்கிங் செய்தும் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டும் வருகின்றது.
பாதிப்பு
இதனிடையே கடந்த வாரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாகவே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்தது இதேபோல் சாயல்குடி வாலிநோக்கம் கடலாடி உள்ளிட்ட பகுதியிலும் தொடர்ந்து கோடை மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் வாலிநோக்கம் பகுதியிலும் உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.
மழை பெய்ததால் உப்பு நிறுவனத்திற்கு எதிரே மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த கல் உப்புகள் கோடை மழையில் நனைந்து வீணாக கரைந்து ஓடின. தொடர்ந்து பெய்த மழையால் மழைநீர் விழுந்து கல் உப்புகள் நிறம் மாறிய நிலையிலும் காட்சியளித்து வருகின்றன.
தார்ப்பாய்
தொடர்ந்து மழை பெய்த போதும் மழையில் உப்பு நனைந்து கரைந்து வீணாவதை தடுக்க தார்ப்பாய் கொண்டு மூடி அந்த கல்உப்பை பாதுகாக்கவோ உப்பு நிறுவன அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இனி இது போன்ற மழை பெய்யும் சீசனில் கல் உப்புகளை பாதுகாக்கும் பொருட்டு பெரிய தார்ப்பாய் கொண்டு மூடி அந்த கல்லுப்புகளை பாதுகாக்க இனியாவது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று அதை நம்பி வாழும் தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம் வாலிநோக்கம் பகுதியில் உள்ள தனியார் உப்பு நிறுவனத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள கல் உப்புகள் தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.