வேப்பனப்பள்ளி அருகே சாலையில் இடுப்பளவு தேங்கி நிற்கும் மழைநீர்-ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடக்கும் அவலம்


வேப்பனப்பள்ளி அருகே சாலையில் இடுப்பளவு தேங்கி நிற்கும் மழைநீர்-ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடக்கும் அவலம்
x

வேப்பனப்பள்ளி அருகே சாலையில் 3 இடங்களில் இடுப்பளவு தேங்கி நிற்கும் மழைநீரை பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்கிறார்கள்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

மலை கிராமம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஏக்கல்நத்தம் மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கவும், ஆஸ்பத்திரிகளுக்கு செல்லவும் 3 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியை கடந்து, மகராஜகடைக்கு வந்து செல்கிறார்கள்.

இவர்களின் வசதிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் செல்ல வசதியாக தரைப்பாலங்கள் அமைக்கப்படவில்லை.

இடுப்பளவு மழைநீர்

இந்தநிலையில் வேப்பனப்பள்ளி பகுதியில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் 3 இடங்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கிராமத்தில் இருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதனிடையே குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கயிறு கட்டி தண்ணீரில் இறங்கி அந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். சிலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளனர். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

தரைப்பாலம்

பல ஆண்டுகள் போராடி ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு சாலை வசதியை பெற்றோம். ஆனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் தரைப்பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்தால் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆண்டில் 8 மாதங்களுக்கு மேல் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழந்தைகளை பள்ளிக்கு சரியாக அனுப்ப முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே ஏக்கல்நத்தம் மலை கிராமத்துக்கு செல்லும் சாலையில் 3 இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். சாலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story