கிருஷ்ணகிரி முல்லை நகர், அக்ரஹாரத்தில் பல மாதங்களாக வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி முல்லைநகர், அக்ரஹாரம் பகுதிகளில் பல மாதங்களாக வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் ஆவின் மேம்பாலம் எதிரில் அக்ரஹாரம், முல்லை நகர் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதிகளில் தனியார், அரசு பள்ளிகள்உள்ளன.
கிருஷ்ணகிரி நகரையொட்டி இந்த பகுதிகள் அமைந்துள்ளதால், வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆன போதிலும் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளாக அவை உள்ளன. குறிப்பாக மழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது. மழை நின்ற பிறகு, 10 நாட்களுக்கு மேல் ஆகியும் தண்ணீர் வடியாமல் வீடுகளை சூழ்ந்து நிற்கிறது.
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு
மழை நீர் செல்ல வழி இல்லாததும், கழிவுநீர் கால்வாய் வசதி அந்த பகுதியில் இல்லாததுமே இதற்கு காரணம் ஆகும்.
இவ்வாறு மழை நீர் செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதால் வீட்டில் இருந்து பொதுமக்கள் பல நாட்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழையால், தேவசமுத்திரம் ஏரி நிரம்புகிறது. அதில் இருந்து வெளியேறும் உபரி நீர் முல்லை நகர், அக்ரஹாரம் பகுதிகளுக்குள் புகுந்து, தேங்கி நிற்கிறது.
தண்ணீர் வெளியேறும் நீர்வழிப்பாதைகளில் பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிப்பில்உள்ளன.
இதனால் தண்ணீர் வெளியேற முடியாமல் பல மாதங்களாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்பது, தொடர்கதையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மழை நீர் தங்கு தடையின்றி சென்ற நிலையில், சமீபத்தில் அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமானதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.
அடிப்படை வசதிகள் தேவை
பல மாதங்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால், தற்போது அவை பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி துன்புறுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
எனவே தேசிய நெடுஞ்சாலையையொட்டி மழைநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏற்கனவே உள்ள கால்வாய் பாதையை அகலப்படுத்தினால் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.