24 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது
தஞ்சை மாவட்டத்தில் 24 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் 24 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது.
பலத்த மழை
தஞ்சை மாவட்டத்தில் 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் மழை அவ்வப்போது மழை பெய்தது.
கொள்முதல் பணி பாதிப்பு
இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இந்த பகுதிகளில் அறுடை பணிகள்மேலும் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2-வது நாளான நேற்று தஞ்சையில் பகலில் மழை பெய்யவில்லை. பிற்பகலில் லேசாக மழை பெய்தது. மழைஅளவு குறைந்தால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய வாய்ப்பு உள்ளது. மேலும் கொள்முதல் நிலையங்களின் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை விவசாயிகள் தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர். நெல் ஈரப்பதம் காரணமாகவும், மழை பெய்வதால் தூற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லாததாலும் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கணக்கெடுக்கும் பணி
தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுக்கும் பணியை வேளாண்மைத்துறையினர் தொடங்கியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமாலை நிலவரப்படி 24 ஆயிரத்து 85 ஏக்கரில் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 1,125 ஏக்கரில் உளுந்தும், 375 ஏக்கரில் கடலையும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மழை நின்றபிறகு தான் இதன் பாதிப்பும் அதிகமாகுமா அல்லது குறையுமா என்பது தெரியவரும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.