ஈரோட்டில் சூறைக்காற்றுடன் மழை:சாக்கடை கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி
ஈரோட்டில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது சாக்கடை கால்வாயில் மூழ்கி ஒருவர் பலியானாா்
ஈரோட்டில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது, சாக்கடை கால்வாயில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
மின் கம்பம் முறிந்தது
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை சுமார் 30 நிமிடங்கள் பெய்தது. இந்த மழையின் காரணமாக அண்ணாமலை லே-அவுட் உள்பட பெரும்பாலான இடங்களில் மரக்கிளைகள் முறிந்தும், சில இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தும் விழுந்தன. இதில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் மின் கம்பிகளும், மின் கம்பங்களும் சேதமானதால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன.
கால்நடை ஆஸ்பத்திரி ரோட்டில் கோவில் சுற்றுச்சுவர் மழையால் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இந்த மழையின் காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட் பகுதி உள்பட மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குட்டைபோல் தேங்கிநின்றன. வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை, மாநகராட்சி பணியாளர்கள் நேற்று வாகனம் மூலம் உறிஞ்சி அகற்றினர். மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்கா நுழைவுவாயில் பகுதியில் முறிந்து விழுந்த மின் கம்பத்தை, மின்வாரிய அலுவலர்கள் அகற்றி புதிதாக மின் கம்பம் நட்டனர்.
ஒருவர் பலி
இதேபோல் சாக்கடை கால்வாய்களில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து காளைமாட்டு சிலை நோக்கி சென்ற பஸ்சில் பயணித்த ஒருவர், தீயணைப்பு நிலையம் பஸ் நிறுத்தம் பகுதியில் இறங்கி நின்றார். அப்போது, பஸ் நிறுத்தத்தையொட்டி உள்ள சாக்கடை கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், கால்வாய் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து மூழ்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, சாக்கடை கால்வாய்க்குள் மூழ்கிய நபரை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும். ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஈரோடு -40, கவுந்தப்பாடி -26.80, கொடிவேரி -24, மொடக்குறிச்சி -9, கோபி -4.20, சென்னிமலை -3, அம்மாபேட்டை -3, பெருந்துறை -2, பவானி -1.80, குண்டேரிப்பள்ளம் -1.80, வரட்டுப்பள்ளம்-1.