திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் மழை:100 ஏக்கர் பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன


திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் மழை:100 ஏக்கர் பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன
x

திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் மழை 100 ஏக்கர் பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

நாகப்பட்டினம்

திட்டச்சேரி,

திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சூறாவளி காற்றுடன் மழை

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த 6-ந்தேதி சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் திட்டச்சேரி, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, ஏனங்குடி, திருப்புகலூர், ஆலத்தூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காற்றுடன் பெய்த இந்த மழையால் திருமருகல் ஒன்றியம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த 100 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி செடிகள் சேதமடைந்துள்ளன.

பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன

பருத்தி பயிரிட்டு 70 முதல் 90 நாட்கள் வயதுடைய பருத்தி செடிகளாக உள்ளது. இன்னும் சில நாட்களில் பஞ்சு எடுக்கும் நிலைக்கு வந்த பருத்தி செடிகள் சூறாவளி காற்றில் பருத்தி காய்கள் கொட்டி விட்டன. குறிப்பாக பருத்தி செடிகள் பல இடங்களில் வேரோடு சாய்ந்துள்ளது.

திருமருகல், சீயாத்தமங்கை, விற்குடி, வாழ்குடி, திருச்செங்காட்டங்குடி, காரையூர், திருப்பயத்தங்குடி, திருக்கண்ணபுரம், ஆலத்தூர், சேஷமூலை, இடையத்தங்குடி, திருப்புகலூர், வவ்வாலடி, அம்பல், பொறக்குடி, ஏர்வாடி, எரவாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், மருங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உரிய இழப்பீடு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் பருத்தி வயல்களில் தண்ணீர் சூழ்ந்து பருத்தி செடிகள் அழுகி இருந்தன. தண்ணீரை வடிய வைத்து உரம் வைத்து பாதுகாத்தோம். அத்தகைய இடர்பாட்டில் தப்பி பிழைத்த பருத்தி செடிகளில் இருந்து முதல் சுற்று பஞ்சு எடுக்க வேண்டிய நிலையில், சூறாவளி காற்று அடித்து மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஏற்கனவே மழைநீர் சூழ்ந்து அழுகிய போதும் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி செடி குறித்த கணக்கெடுப்பு நடத்தவில்லை.

இந்த நிலையில் 2-வது முறையாக சூறாவளி காற்று அடித்து பருத்திச் செடிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. எனவே இதுகுறித்த கணக்கெடுப்பை நடத்தி தமிழக அரசு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story