திட்டக்குடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை2 இடங்களில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
திட்டக்குடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் 2 இடங்களில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி,
அகனி நட்சத்திரம் நேற்றுடன் விடைபெற்ற நிலையில், லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படியே, கடலூரில், நேற்று பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. இரவு 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழையாக பெய்தது. இந்த மழை சுமார் 15 நிமிடத்துக்கும் மேலாக நீடித்தது.
இதேபோன்று, திட்டக்குடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், விருத்தாசலம் சாலையில் கூடலூர், கொடிகளம் ஆகிய இடங்களில் 2 புளியமரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் பொதுப்பணி, வருவாயத்துறையினர் விரைந்து சென்று 2 மரங்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. இதேபோல் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பகுதியிலும் லேசான அளவில் மழை பதிவாகி இருந்தது.