பெருஞ்சாணி அணை பகுதியில் பலத்த காற்றுடன் மழை
பெருஞ்சாணி அணை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது சில மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குலசேகரம்:
பெருஞ்சாணி அணை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது சில மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த காற்றுடன் மழை
குமரி மாவட்டத்தில் தெற்மேற்கு பருவமழை பொய்த்து போனது. அதிலும் இந்த மாதத்தில் 5 சதவீத மழை கூட பெய்யாமல் மழை ஏமாற்றியது. மேலும் கோடையை போன்று வெயிலும் சுட்டெரித்து வந்தது. இதே நிலை நீடித்தால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலையும் உருவாகி உள்ளது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளில் நேற்று மழை பெய்தது.
மரங்கள் சாய்ந்தன
இதில் பெருஞ்சாணி பகுதியில் சற்று கன மழை பெய்ததோடு பலத்த காற்றும் வீசியது. இதனால் சுருளோடு-வீரப்புலி இடையே சாலையோரம் நின்ற சில மரங்கள் சாய்ந்தன.
இந்த மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்ததால் அந்த மின்கம்பிகளும் அறுந்து சேதமடைந்தன. இதுபற்றி தகவல் அறிந்த குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மைக்கேல் தனபாலன் மற்றும் செல்வ முருகேசன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் மின்சீரமைப்பு பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்
இதேபோல் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட சில இடங்களில் சற்று கனமழையாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாளைக்கு பிறகு மழை பெய்து பூமி குளிர்ந்து இதமான காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.