பெரியகுளம் அருகே பலத்த காற்றுடன் மழை:வாழை மரங்கள் முறிந்து சேதம்
பெரியகுளம் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை அடித்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதில் சூறாவளி காற்றால் லட்சுமிபுரம் பகுதியில் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்தன. இதனால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் லட்சுமிபுரம் பகுதியில் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், தொடர்ந்து கோடை காலங்களில் வீசும் சூறாவளி காற்றால் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதேபோல் சூறாவளி காற்றால் வாழை விவசாயம் 60 சதவீதம் பாதிக்கப்பட்டடது. இந்த ஆண்டு 90 சதவீதம் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த வாழைகள் அனைத்தும் பூ மற்றும் பிஞ்சு பருவத்தில் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சேதமடைந்த பகுதிகளை வருவாய்த்துறையினர் உடனடியாக பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.