சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டிய மழை


சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டிய மழை
x

சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 26-ந்தேதி சென்னையில் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (27-ந்தேதி) வெயில் வாட்டி வதைத்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூரியன் முகத்தை மறைத்து, கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழல் நிலவியது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் நேற்று பிற்பகலில் லேசான தூரல் மழையாக பெய்ய தொடங்கியது.

மதியம் 2 மணிக்கு மேல் சென்னையில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை கொட்டத் தொடங்கியது. சென்னை அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை சாலை, கிண்டி, மயிலாப்பூர், அடையாறு, மந்தைவெளி, சைதாப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம் உள்பட பல இடங்களில் மழை பெய்தது.

சாலைகளில் தண்ணீர்

கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ததால், நேற்று பகல் நேரத்தில் கூட சென்னையில் சில இடங்களில் இருளடைந்து காணப்பட்டன. அந்த பகுதிகளின் இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றதை பார்க்க முடிந்தது.

மேலும் சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் லேசான மழை பெய்தால் கூட அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் வாகனங்கள் தேங்கிய நீரில் ஊர்ந்து சென்றன.

இடி, மின்னலுடன்...

பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களும் ஆங்காங்கே தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வெளுத்து வாங்கிய மழையில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் நனைந்து சென்றதையும், சிலர் மழையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சாலை ஓரங்களில் ஒதுங்கி நின்றிருந்ததையும் காண முடிந்தது. இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்ததால், நேற்று சென்னை குளிர்ந்தது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் இன்றும் (வியாழக்கிழமை) சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.


Next Story